சமூக நீதி மாநாடு;வீரப்பன் புகைப்படம் உபயோகப்படுத்தத் தடை : கட்டுக்கோப்புடன் வருமாறு தொண்டர்களுக்கு டாக்டர்.ராமதாஸ் உத்தரவு.

விழுப்புரத்தில் வரும் செப்டம்பர் 17ம் தேதி சமூக நீதி மாநாட்டை நடத்த இருக்கிறார் பா.ம.க நிறுவனர் மருத்துவர்.ராமதாஸ். வன்னியர் சங்க விழாவுக்கு வருவது போல, இந்த விழாவில் பங்கேற்கக் கூடாது என பல உத்தரவுகளை பிறப்பித்திருக்கிறார்.

அதில், குறிப்பாக வீரப்பன் புகைப்படம் அச்சிடப்பட்ட உடைகளை அணியக் கூடாது என்பது பெரும் முக்கியதுவம் பெற்றுள்ளது.

இது குறித்து நேற்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் யாரும் செப்டம்பர் 17-ந்தேதியை மறக்க முடியாது. அது தந்தைப் பெரியாரின் பிறந்தநாள் மட்டுமல்ல; தமிழகத்தில் சமூகநீதி தழைப்பதற்காக 21 பேர் தங்களின் இன்னுயிரைத் தியாகம் செய்த நாள். அந்த தியாகம் தான் தமிழ்நாட்டிலுள்ள 108 சமுதாயங்களைச் சேர்ந்த மூன்று கோடி மக்களுக்கு இட ஒதுக்கீடு பெற்றுத் தந்து சமூக நீதியை நிலை நிறுத்தியது. வரும் 17-ந்தேதி மாலை 4 மணிக்கு விழுப்புரம் புறவழிச்சாலை ஜானகிபுரத்தில் சமூக நீதி மாநாட்டை பா.ம.க. மிகப்பெரிய அளவில் நடத்த ஏற்பாடு செய்திருக்கிறது.

இந்த மாநாட்டில் நான் சிறப்புரை ஆற்றுகிறேன் பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. பேசுகிறார். மாநாட்டுக்கான ஏற்பாடுகளை பா.ம.க. தலைவர் ஜி.கே.மணி, ஜெ.குரு ஆகியோர் மிகச்சிறப்பான முறையில் மேற்கொண்டு வருகின்றனர். பா.ம.க. சார்பில் இதுவரை நடத்தப்பட்ட அனைத்து மாநாடுகளையும் விஞ்சும் வகையில் இந்த சமூக நீதி மாநாட்டுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

பா.ம.க. சமூக நீதி வரலாற்றில் இந்த மாநாடு நிச்சயமாக ஒரு மைல் கல்லாக அமையும் என்பது நிச்சயம். தமிழகத்தின் சமூகநீதிப் பயணத்தில் இன்றைய காலக்கட்டம் என்பது மிகவும் முக்கியமானதாகும். சமூக நீதியையும், சமத்துவத்தையும் குலைப்பதற்கான சதிகள் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்டு வருகின்றன. எனவே இந்த மாநாட்டில் அனைவரும் குடும்பத்துடன் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும்’ என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மேலும், இதுகுறித்து மாநிலம் முழுவதும் உள்ள பா.ம.க நிர்வாகிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. இதற்காக வெளியிடப்பட்ட கையேட்டில்,

*வாகனத்தின் மேற்கூரையில் அமர்ந்து பயணம் செய்யக் கூடாது.

*கட்சி மற்றும் சங்க கொடியை தலையில் முண்டாசாக கட்டக் கூடாது.

*சிங்கம், போர்வாள், அக்னி கலசம், வீரப்பன் படம் அச்சடிக்கப்பட்ட பனியன்களைப் பயன்படுத்தக் கூடாது.

*மதுபானம் அருந்தக் கூடாது; மதுபானக் கடை அருகில் கட்சிக் கொடி உள்ள வாகனத்தை நிறுத்தக் கூடாது.

*மற்ற சமுதாய மக்கள் வருந்தும்படி கோஷம் எழுப்பக் கூடாது என்பன உள்ளிட்ட 11 கட்டளைகளைப் பிறப்பித்திருக்கிறார் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *