“நேரடி அரசியலுக்கு இதுதான் தக்க சமயம்” : உள்ளாட்சித் தேர்தலை குறி வைக்கும் உலக நாயகன்.

நடிகர் கமல்ஹாசன் அரசியலுக்கு வருவாரா? இல்லையா? என்பதை தாண்டி தற்பொழுது நேரடி அரசியலுக்கு அவர் தயாராகி விட்டார் என்பதே ஹாட் நியூஸ். அதே சமயம் அது தனிக்கட்சியா? அல்லது மற்ற கட்சியில் இணைப்பா? என்ற குழப்பம் நீடித்து வந்த நிலையில், தனிக்கட்சிதான் எனக் கூறி தற்பொழுது பரபரப்பை கூட்டியுள்ளார்.

இது குறித்து, ஆங்கில ஊடகம் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், “ஆம், நான் தனிக்கட்சி தொடங்குவது பற்றி தான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். அது கட்டாயத்தால் ஏற்பட்ட முடிவு. ஏனென்றால், இப்பொழுது இருக்கும் கட்சிகள் எதுவும் என் அரசியல் கொள்கைகளுக்கு ஏற்றவையல்ல. அரசியல் கட்சி என்பது சித்தாந்தம் சார்ந்தது.நான் பினராயி விஜயனை சந்தித்த உடனே நான் கம்யூனிச ஆர்வத்தை பெருக்கிக்கலாம். ஆனால், ஒரு கட்சியில் இணைவது என்பது நம்பிக்கை கொள்வது, தப்புவது, தாவுவது போன்ற எளிய காரியமல்ல. என்னுடைய அரசியல் இலக்குகளை இப்போதுள்ள கட்சிகள் நிறைவு செய்யவில்லை. சசிகலா அகற்றப்பட்டது ஒரு திடமான முன்னகர்வு. ஆனால், அது வெறும் தொடக்கம் தான். அதற்காக வலிமையாக குரல் கொடுத்தவன் நான். தற்போது அது நடந்திருக்கிறது. இது எனக்கு நம்பிக்கை கொடுத்திருக்கிறது. இன்னும் நிறைய மாற்றங்களைச் செய்ய முடியும். எவ்வளவு தாமதமானாலும் பரவாயில்லை, நான் மாற்றத்தைக் கொண்டுவர நினைக்கிறேன். நான் சந்தர்ப்பவாதிதான். நான் நேரடி அரசியலுக்கு வர இதுதான் சரியான சந்தர்ப்பம். தோற்றுவிடுவேன் என சிலர் எச்சரிக்கின்றனர். அதுபற்றி கவலையில்லை, இந்த நாட்டில் ஒன்று நான் இருக்க வேண்டும் அல்லது ஊழல் இருக்க வேண்டும். இரண்டும் ஒன்றாக இருக்க முடியாது” என்று தெரிவித்தார்.

மேலும், “ஒரு முறை வாக்களித்துவிட்டு ஐந்து வருடம் காத்திருக்க வேண்டிய நிலை இனி இருக்காது. நான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றா விட்டால் என்னை உடனே தூக்கி எறியலாம். ஏன் தமிழகத்தில் மட்டும் தான் இதை செய்வீர்களா? என கேட்கின்றனர். ஆம், என் வீட்டை முதலில் நான் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அதனால் இங்கு தான் இதை நான் தொடங்க முடியும். இதற்கு காலதாமதமாகலாம், இருக்கும் வரை நான், எனக்குப் பின் ஒருவர் இதை தொடர்வார்” என்று ஆவேசமாக கூறினார் நடிகர் கமல்ஹாசன்.

இதன் மூலம் அவர் நேரடி அரசியலுக்கு தயாராகிவிட்டார் என்பது உறுதியாகியுள்ளது. மேலும், உள்ளாட்சித் தேர்தலை மனதில் வைத்தே இந்த முடிவை அவர் எடுக்கிறார் என்றும், அதன் மூலம் அனைத்து தரப்பு மக்களையும் சென்றடைய முடியும் என்பதே அவர் இலக்கு என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *