கலைஞானி கமல்ஹாசனின் கலையுலக வயது 58 :

‘களத்தூர் கண்ணம்மா’ நடிகர் கமல்ஹாசனின் முதல் திரைப்படம். 1960 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ம் தேதி வெளிவந்த இப்படம் அன்றே 100 நாட்களுக்கு மேல் ஓடி சாதனை படைத்தது.

ஏ.வி.மெய்யப்ப செட்டியாரின் தயாரிப்பில்,
ஏ. பீம்சிங் இயக்கத்தில் உருவான இப்படத்தில்
ஜெமினி கணேசன், டி.எஸ்.பாலைய்யா, சாவித்திரி, மனோரமா போன்ற நடிகர்களுடன் குழந்தை நட்சத்திரமாக ‘செல்வம்’ என்ற கதாபாத்திரத்தில் கமல்ஹாசன் அறிமுகமானார். அப்பொழுது அவருக்கு 5 வயது
(பிறப்பு : நவ.7,1954).

தவறான சூழ்நிலைகளினால் பிரிந்து செல்லும் இளம் தம்பதிகளையும், அவர்களுக்குப் பிறக்கும் அப்பாவி மகனையும் அவன் அனாதை இல்லத்தில் வளர்வதைப் பற்றியும் தத்ரூபமாக எடுக்கப்பட்ட இத்திரைப்படம் விமர்சன ரீதியாக பாராட்டப்பட்டதோடு, வர்த்தக ரீதியாகவும் வெற்றி கண்டது. அதுமட்டுமன்றி இந்திய மத்திய அரசின் பாராட்டுச் சான்றிதழ் மற்றும் ஜனாதிபதியின் தங்கப்பதக்க விருது போன்ற விருதுகளையும் இத்திரைப்படம் பெற்றது.

மேலும், நடிகர் கமல்ஹாசனுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்காக தேசிய விருதும் வழங்கப்பட்டது.

தனது முதல் படத்திலேயே தேசிய விருது வென்ற கமல்ஹாசன், திரையுலக வாழ்வில் இன்றுடன் 57 வருடங்களை வெற்றிகரமாக கடந்து பல சரித்திரங்கள் படைத்து பல விருதுகளுடன் ‘உலக நாயகன்’ என்ற உன்னத பெயருடன் 58ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறார். நடிப்பு மட்டுமே பிரதானமாக எண்ணாமல் இயக்குனர், நடன இயக்குனர், தயாரிப்பாளர், பாடல் இயற்றுனர், வசனகர்த்தா, இசை என பல திறமைகளுடன் அரை நூற்றாண்டை கடந்தும் கலை உலகை ஆளும் ஒரு அரசனாகவே இன்றளவும் திகழ்கிறார். இன்றைய சூழலில் சினிமா மட்டுமே தனது தொழில் என்றாலும் அதற்கும் அப்பாற்பட்ட பொது வாழ்வில் தனது ரசிகர்கள் மூலம் நற்பணிகள் செய்வது, அரசியல் கருத்துகளை சற்றும் அசராமல் கூறுவது போன்றது குணாதிசியங்களால் பரபரப்பாகவே செயல்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *